Tuesday, 17 September 2013

வார்ம் ஹோல் ( warm hole)

Posted Image 

‘ காண்டாக்ட்’ படத்தின் கதையை மிகவும் சுருக்கமாக முதலில் நாம் பார்க்கலாம். படத்தில் நாயகியான ஜோடி ஃபோஸ்டர், சிறிய வயதிலிருந்தே வானியல் ஆராய்ச்சியில் நாட்டமுள்ளவள்.சிறிய வயதில் தந்தை இறக்க, வானியல் ஆராய்ச்சியாளராகவே தன் படிப்பை முடித்து, போட்டோரிகாவில் உள்ள 'ஆரசிபோ' வானியல் ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிகிறாள் (நிஜத்திலும் இந்த ஆரசிபோ டெலஸ்கோப் மூலமாகத்தான் கார்ல் சேகன் ஏலியன்களுக்கு செய்தி அனுப்பினார் என்பதை முன்னர் சொல்லியிருக்கிறேன்). அங்கு அவள் பிரபஞ்சத்தில் அதியுயர் அறிவைக் கொண்ட உயிரினங்கள் எங்கேயாவது வாழ்கின்றனவா என்று ஆராய்ந்து வருகிறாள். திடீரென வேகா(Vega) என்னும் 26 ஒளிவருடங்களுக்கு அப்பால் இருக்கும் நட்சத்திரம் ஒன்றிலிருந்து பூமியை நோக்கிச் செய்திகள் வருவதை அவதானிக்கிறாள். வந்த செய்திகள் முப்பரிமாணப் படங்களாக வருகிறது. செய்திகளை ஆராய்ந்து பார்த்ததில், வேகாவில் இருப்பவர்களுடன் எப்படித் தொடர்பு கொள்வது என்ற குறிப்புகளும் இருக்கின்றன. மிக வேகமாக சுற்றிக் கொண்டிருக்கும் மூன்று வளையங்களின் நடுவே, ஒரு மனிதன் இருக்கக் கூடிய, பந்து போன்ற அமைப்பு உள்ள ஒரு கருவியின் மூலம் அவர்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்று அந்தச் செய்தியில் காணப்படுகிறது.அந்த செய்திகளில் இருந்தபடி, பாரிய கருவி ஒன்றை உருவாக்குகின்றனர். 
அந்தக் கருவியின் நடுவே உள்ள பந்து போன்ற அமைப்பினுள்ளே, பலவித வீடியோக் கருவிகளைத் தன் உடம்பில் பொருத்தியபடி, வேகா நட்சத்திரத்துக்கான பயணத்துக்கு ஜோடி ஃபோஸ்டர் ஆயத்தமாகிறாள். பிரயாணம் ஆரம்பமாகப் போகும் கடைசித் தருணங்களான கவுண்ட் டவுன்(Countdown) ஆரம்பமாகிறது. 10, 9, 8...... என்று வரும்போதே ஜோடி ஃபோஸ்டர் பலவிதமானவெளிச்சங்களைக் காண்கிறாள். அத்துடன் அவளுக்கும் பூமிக்கும் உண்டான தொடர்பில் தெளிவில்லாமலும் போகிறது. கவுண்ட் டவுனின் பூச்சியத்தில் பிரயாணம் ஆரம்பமாகிறது. இந்த நேரத்தில் படத்தில் இரண்டு விதமாகக் காட்சிகள் அமைகின்றன. அந்தப் பந்தினுள் அமர்ந்திருக்கும் ஜோடி ஃபோஸ்டருக்கு என்ன நடக்கிறது என்ற அவளது பார்வையிலானது. மற்றது, வெளியே இருந்து அந்தப் பயணத்தை அவதானிக்கும் அமெரிக்க அரசு சார்ந்தவர்கள் பார்வையிலானது.

Posted Image

கவுண்ட் டவுன் ஆரம்பமாகியதும் ஜோடி ஃபோஸ்டர், தான் அமர்ந்திருக்கும் பந்தினுள்ளே,முழுவதும் வித்தியாசமான ஒளிகளைக் காண்கிறாள். அப்புறம் பிரயாணம் ஆரம்பமாகியதும்,குழாய் போன்ற அமைப்புகளுக்கூடாகச் செல்கிறாள். ஒன்று மாறி ஒன்றாகப் பல குழாய்கள் போன்றவை தோன்ற, அவை வழியாகச் செல்கிறாள். இறுதியில், வேகாவை அடைகிறாள். அங்கு என்ன செய்கிறாள், யாருடன் பேசுகிறாள் என்பது பற்றியெல்லாம் இங்கு நான் சொல்லப் போனால் கதை விரிவடைந்துவிடும். வேகாவுக்குச் சென்றவள் பின்னர் மீண்டும் பூமிக்குத் திரும்புகிறாள்.அவளைப் பொறுத்தவரை பயணத்தின் மொத்த நேரம் 18 மணித்தியாலங்கள். ஆனால் பூமியில் அவளின் பயணத்தை அவதானித்துக் கொண்டிருந்தவர்கள் காண்பதோ வேறு காட்சிகள். அவர்களின் பார்வையில், கவுண்ட் டவுன் ஆரம்பமாகி ஸ்டார்ட் பட்டன் அழுத்தப்பட்ட அடுத்த கணம் வேகமாக சுற்றும் கருவியில், தப்புகள் நடந்து பலத்த வெடி விபத்து ஏற்படுகிறது. ஜோடி ஃபோஸ்டர் அமர்ந்திருந்த பந்து அப்படியே கடலினுள் தூக்கியெறியப் படுகிறது. அதாவது பிரயாணம் என்ற ஒன்று நடக்காமலே சில செக்கன்களிலேயே எல்லாம் வெடித்துச் சிதறுகின்றன. உடனே ஜோடி ஃபோஸ்டர் அந்தப் பந்திலிருந்து காப்பாற்றப்படுகிறாள். 

Posted Image

பூமியில் இருந்தவர்களைப் பொறுத்தவரை சில செக்கன்களில், தோல்வியில் முடிந்த அந்தப் பிரயாணம், ஜோடி ஃபோஸ்டரைப் பொறுத்த வரை 18 மணி நேரப் பயணமாகவும், வெற்றிகரமான ஒரு பயணமாகவும் அமைகிறது. அமெரிக்கக் காங்கிரஸ் கமிட்டியின் விசாரணையின் போது, தான் கண்ட காட்சிகளை ஜோடி ஃபோஸ்டர் சொன்னாலும், அதை யாரும் நம்பவில்லை. அவளுடன் இணைக்கப்பட்ட வீடியோ சாதனங்களும், எந்தக் காட்சிகளும் பதிவு செய்யப்படாமல் வெறுமையாகவே இருக்கின்றன. சில செக்கன்களில் நடந்த ஒரு தோல்விப் பயணத்தை, 18 மணிநேரங்கள் நடந்த ஒரு வெற்றிப் பயணமாகச் சென்று வந்தது என்று அவள் சொல்வதற்கான ஒரு சாட்சியத்தையாவது கொடுக்கும்படி கமிட்டி கேட்கிறது. அத்துடன் 25 ஒளி வருடங்கள் தூரத்துக்கு, 18மணி நேரத்தில் எப்படிப் போய் வரலாம் என்பதையும் விளக்கும்படி கேட்கிறது. அப்போது ஜோடி ஃபோஸ்டர் சொல்லும் விளக்கம்தான் இந்தப் பகுதியின் ஆரம்பத்தில், சிலர் மின்னஞ்சலில் கேட்டசந்தேகத்துக்கான பதில்களாக இருக்கப் போகிறது. சொல்லப் போனால் காண்டாக்ட் படத்தின் மொத்தக் கருவுமே கடைசியில் கொடுக்கப்படும் இந்த விளக்கத்தில்தான் தங்கியிருக்கிறது.

இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். மிகவும் கடினமாகப் புரிந்து கொள்ளக் கூடியதும், புரிய வைக்கக் கூடியதுமான ஒரு விசயத்தை உங்களுடன் பரிமாறிக் கொண்டிருக்கிறேன். நான் சொல்பவை உங்களுக்குப் புரியுமானால், அது நிச்சயம் எனக்கு ஒரு மகிழ்வான தருணமாக இருக்கும். இனி விசயத்துக்கு வருவோம்.

ஜோடி ஃபோஸ்டர் காங்கிரஸ் கமிட்டியிடம் சொல்லும் விளக்கம் இதுதான். "பூமியில் மனிதர்கள் உணர்ந்த நேரம்தான் அந்த சில செக்கன்கள். ஆனால் ஸ்பேஸ் (Space) என்னும் பிரபஞ்ச வெளியில் பிரயாணம் செய்யும் நேரம் என்பது வேறு. ஐன்ஸ்டைனும், ரோசன்பேர்க்கும் சொன்ன 'பாலம்' (Bridge)கோட்பாட்டின்படி, ஒரு வோர்ம் ஹோல் (Wormhole) உருவாகி, அதன் மூலம் நான் மிகக் குறைந்த நேரத்தில் வேகாவுக்கு சென்று வந்திருக்கலாம்" என்று யூடி ஃபோஸ்டர் சொல்கிறாள். 'அது கோட்பாடுதானேயொழிய இன்னும் நிரூபிக்கப்படாதவை' என்று சொல்லி அதை ஏற்க மறுக்கின்றார்கள் கமிட்டியினர். இந்த இடத்தில் நாம் படத்தில் இருந்து விலகி, 'ஐன்ஸ்டைன்-ரோசன்பேர்க் பாலம்' (Enstein-Resenberg Bridge) என்னும் கோட்பாடு பற்றிப் பார்க்கலாம்.

Posted Image

ஐன்ஸ்டைனை யாரென்று உங்களுக்கு நான் புரிய வைக்கத் தேவையில்லை. இன்றுவரை உலகத்தில் முதலாவது விஞ்ஞானியாக கருதப்படுபவர். பிரபஞ்சம் பற்றிய பல கோட்பாடுகளை உருவாக்கியவர். ஐன்ஸ்டைன் பிரபஞ்சத்தில் மூன்று துளைகள் (Holes) இருக்கின்றன என்று சொல்லியிருக்கிறார். ப்ளாக் ஹோல் (Black hole), வைட் ஹோல் (White hole), வோர்ம் ஹோல்(Wormhole) என்பவைதான் அந்த மூன்றும். ப்ளாக் ஹோல் பற்றி அனேகமாக நீங்கள்கேள்விப்பட்டிருந்தாலும், வைட் ஹோல், வோர்ம் ஹோல் என்பவை பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இந்த மூன்று துளைகளும் பிரபஞ்சம் எங்கும் இருப்பதாக ஐன்ஸ்டைன் சொன்னாலும்,அவற்றைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு மனித விஞ்ஞானம் இன்னும் வளரவில்லை. இவை இருக்கின்றன என்று ஐன்ஸ்டைன் ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலோ, எழுந்தமானத்திலோ கூறிவிடவில்லை. மிகவும் சிக்கலான, நுணுக்கமான வானவியல் கணிதச் சமன்பாட்டின் மூலம் அவற்றை நிறுவியிருக்கிறார். இதுவரை இவை இல்லையென்று எந்த ஒரு விஞ்ஞானியும்மறுக்கவில்லை. அதுதவிர, இவற்றைக் கண்டு பிடிப்பதே தற்கால விஞ்ஞானிகளின் நோக்கமாகவும் இருக்கிறது. 

இப்போது நாம் பார்க்கப் போவது வோர்ம் ஹோலைப் பற்றித்தான். ஒரு புழுவைப் போல அமைப்பில் விண்வெளியில் உருவாகும் ஒரு குழாய் போன்ற வடிவத்தைத்தான் வேர்ம் ஹோல் என்பார்கள்.விண்வெளியில் ஒரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்துக்குப் பிரயாணம் செய்வதற்கு, நேராக அந்த இடத்தை நோக்கி விண்கலத்தில் செல்வதை விட, வோர்ம் ஹோல் மூலமாகப் செல்வது இலகுவானதும், காலத்தை மிச்சம் பிடிப்பதுமாகும் என்கிறார் ஐன்ஸ்டைன். நமது பிரபஞ்சம்(Universum) தட்டையானது என்றே முன்னர் விஞ்ஞானிகள் நினைத்திருந்தனர். ஆனால் அது வளைந்த நிலையில் இருக்கிறது என்ற உண்மை பின்னர்தான் தெரிய வந்தது. இந்த நிலையில் ஐன்ஸ்டைனும், அவரது நண்பருமான ரோசன்பேர்க் என்பவரும் சேர்ந்து ஒரு மாபெரும் புரட்சிகரமான வானியல் விஞ்ஞானக் கோட்பாட்டை வெளியிட்டனர். அதுவே 'ஐன்ஸ்டைன்-ரோசன்பேர்க் பாலம்' எனப்படுகிறது. முதலில் இந்தப் படத்தைப் பாருங்கள். இது வோர்ம் ஹோலினால் உருவாகும் பாலம் கோட்பாட்டுக்கு மிக நல்ல உதாரணமாக இருக்கும். 

Posted Image




படத்தில் நமது பூமிக்கும் 'சிர்ரியஸ்' என்னும் நட்சத்திரத்துக்கும் உள்ள இடைவெளி 90 ட்ரில்லியன் கிலோமீட்டர் என்று காட்டப்பட்டிருக்கிறது. பிரபஞ்சம் வளைந்த நிலையில் உள்ளதால், வோர்ம் ஹோல் மூலமாக சிர்ரியஸ் நட்சத்திரத்துக்குச் செல்லலாம் என்றும் காட்டப்பட்டிருக்கிறது. வோர்ம் ஹோலினூடாக பிரயாணம் செல்லும்போது, காலம் மிகவும் சுருங்கிவிடும் என்பதால், அந்தப் பிரயாணமும் மிகக் குறுகிய நேரத்திலேயே நடக்கிறது. 
இப்படியான ஒரு வோர்ம் ஹோல் மூலமாகத்தான் காண்டாக்ட் படத்தின் நாயகி ஜோடி ஃபோஸ்ட்டரும் வேகா நட்சத்திரத்தை அடைகிறாள். ஆனால் அவள் சொல்வதை அமெரிக்கக் காங்கிரஸ் கமிட்டி நம்பவில்லை ஆனால் படத்தின்இறுதியில் ஒரு முக்கிய சம்பவத்துடன் படம் முடிவடைகிறது சில செக்கன்களில் நடந்ததை 18 மணி நேரம் நடந்த பிரயாணம் என்று ஜோடி ஃபோஸ்டர் சொன்னதற்குக் காரணம் கேட்கிறது கமிட்டி அவள் உடம்பில் பொருத்தப்பட்ட வீடியோவில் கூடக் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை ஆனால் அந்த வீடியோவை இரகசியமாக ஆராய்ந்த போது அதில் எந்தக் காட்சியும் இல்லாவிட்டாலும் ரெக்கார்ட் செய்யப்பட்ட நேரம் மொத்தமாக 18 மணி நேரம் ஆகியிருக்கிறது 18 மணி நேரம் பதிவு செய்யப்பட்டிருக்குமானால்,அவள் பிரயாணம் செய்ததும் 18 மணி நேரமாகத்தான் இருக்கும் என்பது  நிரூபனமாகிறதல்லவா?



நன்றி,

 http://www.yarl.com/forum3/index.php?showtopic=105668


No comments:

Post a Comment